மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஜூலை 3) VLCC மிஸ் இந்தியா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மேலும் இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நேஹா தூபியா, மலைக்கா அரோரா, டினோ மோரியா, ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா, நடன இயக்குனர் ஷியாமக் தாவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு அழகிகளை தேர்ந்தெடுத்தனர்.
அதில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி 2022 ஆண்டுக்கான "ஃபெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட்" பட்டத்தை தட்டி சென்றுள்ளார். தொடர்ந்து இரண்டாம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் என்பவரும், மூன்றாவது இடத்தை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் என்பவரும் பிடித்தனர். இதனை மிஸ் இந்தியா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அழகிப் பட்டம் 'மிஸ் இந்தியா 2021' மானசா வாரணாசி, சினி ஷெட்டிக்கு கிரீடம் சூட்டினார். இதையடுத்து இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தாண்டு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 வயதுடைய சினி ஷெட்டி, யார் என்று சமூக வலைத்தளங்களின் பரவலாக தேடப்பட்டு வருகிறது. சினி ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான்.
தமது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பாக நிதித்துறையை தேர்ந்தெடுத்து இளங்களைப்பட்டமும் பெற்றார். ஒரு பக்கம் மாடலிங், பேஷன் என்று இருந்தாலும், மற்றொரு பக்கம் படிப்பிலும் நாட்டம் செலுத்தி வரும் இவர், தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (CFA)க்கான தொழில்முறை கல்வியை பயின்று வருகிறார்.
படிப்பு, மாடலிங்கில் மட்டும் இல்லாமல் இதர கலைகளிலும் ஆர்வம் கொண்டவராக திகழும் இவர், ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.