இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் பசித்த 6 வயது சிறுமிக்கு உணவு கொடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இண்டிகோ விமானத்தில் தனது 6 வயது மகளுடன் பயணம் செய்த நபர் பசியால் அழுத தனது குழந்தைக்கு உணவு கேட்டுள்ளார். அதற்கு இண்டிகோ விமான ஊழியர்கள் கார்ப்பரேட் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை செய்வோம் எனக் கூறியுள்ளனர். பின்னர் இறுதி வரை அழுத குழந்தைக்கு விமான ஊழியர்கள் உணவு கொடுக்கவில்லை. இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சம்பவத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இண்டிகோ விமானத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல கடந்த மாதம் ராஞ்சியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவரை விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில், சிறுவனுக்கு எலெக்ட்ரிக் சக்கர நாற்காலி வாங்கித்தர உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.
மேலும் சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே, மும்பையிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது, அந்த விமானத்தில் பணிபுரியும் விமான ஊழியர், முரட்டுத்தனமாக நடந்து கொண்டார், ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் அந்த ஊழியர் நடந்துகொண்டார் என ட்வீட் செய்திருந்தார்.
இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்தின் மேல் தொடர்ந்து இத்தகைய புகார்கள் வந்துகொண்டுள்ளன. அரசு நிறுவனமாக ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னர் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும் இது போன்ற செயல்பாடுகள் அதிகரிப்பது அந்த நிறுவனத்துக்கு பாதிப்பாகவே அமையும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.