நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை பேசிய பா.ஜ.க -வை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என கோரி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதனொரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, உத்தர பிரதேச போலிஸார் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர்.
அதோடு நின்றுவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லமியர்கள் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது. மேலும் இந்த போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் ஜாவேத் முஹமது. இவரது வீட்டையும் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர்.
இதையடுத்து முஹமதுவின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உத்தர பிரதேச அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கையை கண்டித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். தற்போது தங்களது வீடு இடிக்கப்பட்டபோதும் கூட யோகி அரசைக் கண்டு பயந்து விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் அஃப்ரீன் பாத்திமா.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஆவார் அஃப்ரீன் பாத்திமா. இவர் அலிகார் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மோடி அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், உத்தர பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் ஆட்சி குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், "இடிக்கப்பட்ட எங்கள் வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் அம்மா செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அதனால் எங்கள் வீடு முழுவதும் செடிகள் நிறைந்து இருந்தது.
வீட்டை இடிக்கும்போது 100க்கும் மேற்பட்ட செடிகளும் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தது. இது செடிகளுக்கும் கடினமாகத்தான் இருந்திருக்கும். செடிகள் கூட அவர்களைத் திட்டியிருக்கும் என நினைத்து நான் சாந்தப்படுத்திக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்களை துன்புறுத்தி இன்பம் அடையும் போக்கு அதிகமாகிவிட்டது. வீடுகளை இடிப்பது, சிறையில் அடைப்பது, ஊடகங்களில் இழிவாகப் பேசுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதை ஒருநாளும் நாங்கள் தரப்போவதில்லை. ஒரு துளி கண்ணீரைக் கூட நாங்கள் சிந்தப் போவதில்லை" என தெரிவித்துள்ளார்.