இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்தக்களை, மத வெறி வெறுப்பு பேச்சுக்களை பா.ஜ.க தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பேசி வந்த நிலையில், தற்போது பா.ஜ.க தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபியை பற்றியும் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகீர்ந்திருந்தார்.
இந்நிலையில், நுபுர் சர்மா இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் புகாரளித்தனர். முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்களை கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி மூலம் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. அதேவேளையில் நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியதாக பா.ஜ.க தலைமை அறிவித்திருந்தது. பா.ஜ.கவின் இத்தகைய நடவடிக்கை கண் துடைப்பு என்றும் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதே பாடமாக அமையும் என அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நபிகள் நாயகம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு இஸ்லாமியர்களின் குரல்களைக் கேட்காத அரசு வெளிநாட்டு இஸ்லாமியர்களின் கண்டனத்துக்கு பணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது என அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
ஆனால், அவர்களின் பேச்சுக்கு மதிப்புக்கொடுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தபின்னரே நடவடிக்கை என்னும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். உள்நாட்டு இஸ்லாமியர்களின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்காது. நீக்கப்பட்ட இருவரையும் 6 மாதங்களில் கட்சியில் சேர்க்காமல் இருந்தால் சரி.
அவர்கள் பேசியதும், ட்வீட் செய்ததும் தவறாக இருந்தது என்றால் அரசாங்கமே பொறுப்புடன் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் நீதி நிலைநாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.