15வது ஐ.பி.எஸ் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடர் கோலாகலமாக்க நடந்து முடித்துள்ளது. இந்த தொடரின் அறிமுக சீசனிலேயே அனுபவமிக்க அணிகளையெல்லாம் தாண்டி குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
சென்னை, மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் மோசமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடந்துமுடிந்துள்ள ஐ.பி.எல் 2022 தொடர் மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு வைத்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அரசியல் தலைவர்கள் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டாடா ஐ.பி.எல் தொடரின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற எண்ணம் புலனாய்வு அமைப்பினர் மத்தியில் பரவலாக உள்ளது. இது தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் இதை அரசு செய்யாது. காரணம் அமித்ஷாவின் மகன் பி.சி.சி.ஐ-யின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருக்கிறார். எனவே பொதுநல வழக்குகள் தொடரப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவரே அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா சர்வாதிகாரி என குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படகிறது.
மேலும் ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் முடியும் போதும் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஏற்கனவே மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.