டெல்லியில் உள்ள மெஹ்ராலி கால்விலைத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தனது சகோதரியை மர்ம நபர்கள் கடத்தி பணம் கேட்டு மிரட்டுவதாகப் புகார் அளித்துள்ளார். மேலும், கடத்தல்காரர்கள் செல்போனுக்கு அனுப்பி புகைப்படத்தையும் போலிஸாரிடம் காண்பித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். மேலும் அவர்கள் பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அவரது சகோதரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பிறகு அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணைக் கொண்டு போலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் ஆக்ராவில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலிஸார் ஒரு விடுதியில் அவரை கண்டுபிடித்தனர். அப்போது அவரிடம் நடந்த சம்பவத்தை கேட்ட போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தப் பெண்ணுக்கு பண நெருக்கடி இருந்துள்ளது. இதனால் தனது சகோதரனிடமே பணத்தைப் பறிக்க திட்டம்போட்டுள்ளார். பிறகு தன்னை கடத்தியதாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து அவரது தனது சகோதரனை தொடர்பு கொண்டு ஆண் குரலில் பேசியுள்ளார். மேலும் தன்னை கட்டிவைத்துள்ளது போன்ற படத்தையும் அனுப்பிவைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.