இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான இந்துத்வ கும்பலின் தாக்குதல்கள் ஒன்றிய அரசின் பாஜக ஆட்சியமைத்த நாளில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
இஸ்லாமியர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து வந்த பாஜக, இந்துத்வ கும்பலின் அடக்குமுறைகள் தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்களாக எண்ணி தாக்குவதும் நடைபெறுகிறது.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மன ரீதியாக நலிவுற்று இருந்த 65 வயதுடைய பவர்லால் ஜெயின் என்ற முதியவரை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான தினேஷ் குஷ்வாஹா “நீ இஸ்லாமியரா? உன் பெயர் முகமதுதான? உன் அடையாள அட்டையை காட்டு?” எனக் கேட்டு அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.
ஏற்கெனவே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நலிவுற்று இருந்த பவர்லால் ஜெயின், பாஜக நிர்வாகியின் தாக்குதலால் இறந்தே போயிருக்கிறார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் கடந்த மே 17-18ம் தேதிக்கிடையே நடந்திருக்கிறது.
உயிரிழந்த பவர்லால் ஜெயினின் சடலம் மே 19ம் தேதி கிடைக்கப்பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவரது பிரேதத்தை மீட்ட மானஸா பகுதி போலிஸார், முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி தினேஷ் குஷ்வாஹாவை 302 மற்றும் 304 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.
மறைந்த முதியவர் ஜெயின் அதே மாநிலத்தின் ரட்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அண்மையில் குடும்பத்தோடு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் காணாமல் போயிருக்கிறார். பின்னர் மானஸா காவல் எல்லைக்குட்பட்ட சிஸ்ரா கிராமத்திற்கு எப்படியோ சென்றடைந்திருக்கிறார்.
பவர்லால் ஜெயினின் சகோதரர் ராகேஷ் ஜெயின் மானஸா போலிஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயினை தேடி வந்திருக்கிறார். அதன்படியே கடந்த மே 19ம் தேதி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்தே மேற்குறிப்பிட்ட பாஜக நிர்வாகியின் தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், பாஜக உள்ளிட்ட இந்துத்வ கும்பலால் இந்துக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அதன் ஆட்சியாளர்கள் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றுப்போகிறோம் என போர்க்கொடி தூக்கி வருவது நாட்டு மக்களிடையே பெரும் அச்சுறுத்தல்களையே ஏற்படுத்தியுள்ளது என அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.