முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைக் கடந்த இரண்டு வாரங்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
மேலும்,பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றமே விடுதலை செய்யும் என கடந்த வாரம் நீதிமன்றம் அதிரடியாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தது. மேலும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், இன்று உச்சதீமின்றம் ஜாமினில் உள்ள பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.