குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எஸ்.ஏ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக மோனிகா சுவாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் போதிய வருகை இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் கல்லூரிக்கு வந்து முதல்வரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது, ஏ.பி.வி.பி அமைப்பின் தலைவர் ஜெய்ஸ்வால் மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி முதல்வரை மிரட்டியுள்ளார். அங்கிருந்த மற்ற மாணவர்களும் கல்லூரி முதல்வரை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வியாழனன்று நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.பி.வி.பி அமைப்பினரின் இந்த அராஜக நடவடிக்கைக்குப் பலர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடும் எதிர்வினைகள் வந்ததை அடுத்து ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்லிவால் தனது அநாகரிகமான செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவரை ஏபிவிபி அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரார்த்தனா அமீன் தெரிவித்துள்ளார்.