ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா வந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.850 என அம்மாநில அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும், குடிநீர் பற்றாக்குறை எந்த அளவிற்கு ஆபத்தாக மாறிவருகிறது எனவும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் ரவிநாயக் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, கோவா வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.850 என ரவி நாயக் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ரவி நாயக், "கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அப்போது அவர் Himalaya நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வரவழைக்குமாறு கூறினார்.
இதற்காக பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மபுசா என்ற நகரத்திலிருந்து அந்த தண்ணீர் பாட்டிலை வரவழைத்து அவருக்குக் கொடுத்தோம். இந்த பாட்டில் ஒன்றின் விலை ரூ.850 ஆகும்.
நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் மினரல் வாட்டர் பாட்டில்களின் விலை கூட ரூ.150 முதல் 160 வரை உள்ளது. இப்படி தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் மலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அரசு தடுப்பணைகள் கட்டி தண்ணீரைச் சேமித்து வைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
ரவி நாயக் இந்த பேச்சை அடுத்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராகப் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் போது அமித்ஷாவால் எப்படி விலை உயர்த்த தண்ணீர் பாட்டிலை வரவழைத்துக் குடிக்க முடிகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.