இந்தியா

“என் கண்முன்னே கொன்னுட்டாங்க.. யாருமே உதவ வரல” : ஆணவக்கொலை வழக்கில் இளம் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் !

காதல் திருமணம் செய்த வாலிபரை பெண் வீட்டாரே குத்தி கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என் கண்முன்னே கொன்னுட்டாங்க.. யாருமே உதவ வரல” : ஆணவக்கொலை வழக்கில் இளம் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ். பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இவர் சையது அஷ்ரின் சுல்தானா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நாகராஜ், தனது மனைவி சுல்தானாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது.

பின்னர், இந்த கும்பல் கத்தியை எடுத்து நாகராஜ் மீது சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்த நாகராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, சுல்தானாவின் சகோதரர் மொபின் அகமது, அவரது நண்பர் முகமது உட்பட 4 பேர் சேர்ந்துதான் நாகராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தங்களது மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாலே அவரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த ஆணப்படுகொலை நாடுமுழுவதும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுல்தானா பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சுல்தானா அளித்த பேட்டியில், "எங்கள் காதலுக்கு எனது சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை திருமணம் செய்தால், எனது சகோதரர்கள் உன்னை கொலை செய்து விடுவார்கள் என காதலிக்கும்போதே நாகஜாரிடம் கூறினேன். ஆனால், அவர் வாழ்ந்தாலும், இறந்தாலும் உன்கூடதான் என கூறினார். ஆனால் இப்போது அது நடந்துவிட்டது.

எனது சகோதரர்களிடம், எங்களை விட்டுவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் எனது கண்முன்னே நாகராஜை குத்திக் கொன்றுவிட்டார்கள். இந்த கொடூரம் நடக்கும்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. யாராவது உதவ முன்வந்திருந்தால், இன்று எனது கணவர் உயிருடன் இருந்திருப்பார். நாகராஜை கொலை செய்த என் சகோதரர் உள்ளிட்ட அனைவருக்கும் கடும் தண்டனை கிடைக்க வேண்டும்" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories