இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்வா குண்டர்கள் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாகனங்களில் மாடுகளை ஏற்றிச் செல்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கொடூரமாக அடித்து சித்தரவதை செய்து வருகின்றனர். மேலும் மாட்டிறைச்சி எடுத்துச் செல்பவர்களை அடித்து கொலை செய்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை வெட்டியதாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேரை இந்துத்வா கும்பல் ஒன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் பசுவை வெட்டியதாக இரண்டு பழங்குடியினர் மீது 20க்கும் மேற்பட்டோர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த கொடூர சம்பத்தில் பஜ்ரங் தள் அமைப்பிற்குத் தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கு வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங் ககோடியா பஞ்ரங் தள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் கமல் நாத் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவிலேயே பழங்குடி மக்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பழங்குடியினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பஞ்ரங் தள் அமைப்பிற்குத் தொடர்பு உள்ளது என்றும் கமல் நாத் சுட்டிக்காட்டியுள்ளார்.