இந்தியாவில் திருமண சீசன் வந்தாலே கொண்டாட்டங்களுக்கு திண்டாட்டமே இருக்காது. ஆனாலும் அப்படியான கொண்டாட்டங்களில் ஒரு கட்டத்தில் சில அதிர்ச்சியான நிலைகளுக்கு ஆட்படுத்துவதிலும் தவறுவதில்லை.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது நிஜ ராஜ நாகத்தை வைத்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய பயங்கரம் அரங்கேறியிருக்கிறது.
அதன்படி கடந்த புதனன்று மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் நடு தெருவில் இருந்தபடி, திருமண விழாவின் போது பாராதி நடனம் ஆடியிருக்கிறார்கள்.
அப்போது வாடகைக்கு கொண்டு வரப்பட்ட நிஜமான பாம்பை திறந்தவெளியில் கூடையில் வைத்து அதனை கையில் ஏந்தியபடி பாம்பாட்டி மெயின் நாகின் என்ற பாடலுக்கு ஆட்டம் ஆட அவரை தொடர்ந்து அங்கு சூழ்ந்தவர்களும் நடனமாடி கொண்டாடியிருக்கிறார்கள்.
இதனையடுத்து அஞ்சிய அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாம்பை மீட்டனர். அதோடு, பொது இடத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பை வைத்து கொண்டாடியதால் ஐந்து பேரை கைது செய்த போலிஸார் அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், பாம்பின் விஷத்தை முறித்து இவ்வாறு ஆட்டம் ஆடியதும், அதிக ஒலி கொண்ட பாடலை ஒலிபரப்பியதால் அந்த பாம்பு அதிர்ந்து போயிருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாம்பை வைத்து கொண்டாடியவர்களை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.