சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி, விவசாயம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். சம்பூ என்ற கிராமத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தோனியின் பண்ணை அமைந்துள்ளது.
இந்தப் பண்ணை தோட்டக்கலைப் பயிர்கள், மீன் வளர்ப்பு, கோழி வளப்பு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவையுடன் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையாக அமைந்துள்ளது.
ராஞ்சிக்கு வரும்போதேல்லாம் அவரது பண்ணையில் விளையும் பயிர்களைப் பார்வையிடுவதோடு, அங்கு அதிக நேரம் செலவழித்து வருகிறார் தோனி.
இந்நிலையில், தனது பண்ணைக்காக மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்திலிருந்து அதிகமான புரோட்டீன் சத்து நிறைந்த, உயர்ரக கடக்நாத் கோழிகளை தோனி இறக்குமதி செய்துள்ளார். மத்திய பிரதேசத்திலிருந்து 2 ஆயிரம் கடக்நாத் கோழிகள் அவரது பண்ணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடக்நாத் கோழிகளை வாங்கி வளர்ப்பதற்கு, ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தோனி, 2,000 கடக்நாத் கோழிக்குஞ்சுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்திருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழி வகைளுக்கு 2018ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பழங்குடியின மக்களால் வளர்க்கப்படும் கடக்நாத் கோழி, அம்மக்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.