“இந்தியா தனது உள்நாட்டு சமூக சமநிலையைப் பராமரிக்க வேண்டியதும், வகுப்புவாத எழுச்சியை முதலில் தடுக்க வேண்டியதும் தற்காலத்தின் அவசியம்” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், எந்தக் காரணமாக இருந்தாலும் வன்முறை மற்றும் அதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் வருந்தத்தக்கவை என்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் கூறியுள்ளார். காந்தியின் தேசமான இந்தியா, உள்நாட்டிலும் உலக அளவிலும் அமைதி மற்றும் அகிம்சையின் தூதராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் இணைந்து செயல்படுவது அவசியம்!
“மாறிவரும் உலக அமைப்பில், மிகப்பெரும் உற்பத்தி நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் தேவை. அந்த ஆலைகள் இயங்குவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து செயல்படுவது அவசியம்” என்று மன் மோகன் சிங் கூறியுள்ளார்.
சமூக நல்லிணக்கம்தான் பொருளாதாரச் செழுமை மிக்க மாளிகையைக் கட்டியெழுப்பும் என்றும், குடிமக்களிடையே பரஸ்பர அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் கோபத்தைத் தூண்டி விட்டு சமூக ஒற்றுமையைக் குலைப்பது போன்ற செயல்கள், அழிவை நோக்கிய அவமானகரமான சரிவாகவே இருக்கும் என்றும் டாக்டர்.மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.