இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பல்வேறு பெரும் நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலத்தில் வீட்டினுள் நிறுத்தி சார்ஜ் ஏற்றப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறியதில், 80 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் வீட்டில் இருந்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கடந்த 6 மாதங்களில் பியூர் EV ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவம் பல முறை நடந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான பியூர் EV நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் டீலர்கள் 20 பேர் தாங்கள் டீலர்ஷிப்பிலிருந்து விலகுவதாகவும் டெபாசிட் செய்த தொகையை திரும்பத் தருமாறும் கேட்டுள்ளனர்.
இ-ஸ்கூட்டர்களின் தரத்தை பரிசோதனை செய்வதில் அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தேவையான நடவடிக்கையைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ப்யூர் EV நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் அவற்றின் ஆரோக்கியத்திற்காக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.