உலகம் முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் கூட Zomato, Swiggy, Uber நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் பணி பாதுகாப்பற்ற நிலையில் பட்டதாரி இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் வேலைபார்த்து வருகின்றனர்.
மேலும், வாடிக்கயைளர்களுக்கும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், ஸ்விகி டெலிவரி ஊழியரை சாலையில் பெண் ஒருவர் செருப்பால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் ஸ்விகி டெலிவரி பாயை தனது செருப்பை கழட்டி தாக்குவதுபோன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் நடந்துள்ளது. அடிவாங்கும் அந்த இளைஞர் திலீப் விஸ்வகர்மா என்றும், அந்தப் பெண் மதுசிங் என்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திலீப் பீட்ஸா டெலிவரியை கொடுப்பதற்காக வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இந்த பெண்ணின் வாகனத்தில் மீது தவறுதலாக மோதியுள்ளார். இதில் கீழே விழுந்த அந்தப் பெண் ஆத்திரத்தில், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி பாதுகாப்பற்ற நிலையில் வேலை பார்த்து வரும் டெலிவரி ஊழியர்களிடம் பொதுமக்கள் கொஞ்சம் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.