பொதுவெளியில் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் உள்ள அக்ஷர்தம் மெட்ரோ ரயில் நிலைய கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலையில் ஈடுபட இளம்பெண் ஒருவர் முற்பட்டிருக்கிறார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த CISF வீரர் ஒருவர் மெட்ரோ ரயில் பணியாளர்கள், மற்ற பாதுகாப்பு வீரர்களையும் அலெர்ட் செய்திருக்கிறார்.
இதனையடுத்து இளம்பெண் குதிப்பாக கூறிய இடத்தில் கூடி போர்வையை விரித்து அவரை காப்பாற்ற அனைவரும் தயாராகினர். இதனிடையே தற்கொலை முடிவை கைவிடும் படி CISF வீரர்கள் கூறியும் கேட்காத அப்பெண் கீழே குதித்திருக்கிறார்.
நல்வாய்ப்பாக உடலில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். அப்பெண்ணுக்கு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தக்க சமயத்தில் தற்கொலையை தடுத்து நிறுத்த காரணமாக இருந்த CISF வீரருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்பதும் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த ஏப்ரல் 5ம் தேதி காதல் தோல்வி காரணமாக பெண் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.