உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருப்பவர் யோகி ஆத்தியநாத். இந்நிலையில் இன்று அதிகாலை முதல்வரின் அலுவலக ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.
மேலும் அந்த பக்கத்தில் இருந்த யோகி ஆத்தியநாத்தின் படத்தை நீக்கி அதற்குப் பதிலாக கார்டூன் குரங்கு பொம்மையின் படத்தை வைத்துள்ளனர். அதேபோல் கிரிப்டோ கரன்ஸிக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்துள்ளனர்.
இதையடுத்து ஹேக்கர்கள் அந்த ட்விட்டர் கணக்கில் இருந்து 25 நிமிடத்தில் 50க்கும் அதிகமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஹேக்கர்களிடம் இருந்து ட்விட்டர் கணக்கை மீட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்ஸிக்கு ஆதரவாக ட்வீட் வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது ஒரு மாதத்தில் ஜே.பி நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்ஸிக்கு ஆதரவாக கருத்து வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.