மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் கிராமத்தில் வானிலிருந்து மர்ம பொருள் ஒன்று இரவு நேரத்தில் விழுந்துள்ளது. பின்னர் அடுத்த நாள் காலை இதை அப்பகுதி கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் 10 அடிக்கு உலோகத்தால் செய்யப்பட்ட வளையம் இருந்ததால், வானிலிருந்து வேற்றுக்கிரக வாசிகள் இந்த பொருளைப் பூமியில் வீசியுள்ளதாக கூறிவந்துள்ளனர்.
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த அதிகாரிகள் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் அந்த உலோக வளையத்தைப் பரிசோதனை செய்தனர்.
பின்னர் இந்த சோதனை முடிவில் விண்ணுக்கு ஏவப்பட்ட சீன ராக்கெட் ஒன்றின் பாகங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு ராக்கெட்டுகளின் துண்டுகள் இப்படி பூமியில் விழுவது வழக்கமான ஒன்றுதான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படி விழுவதால் மக்களுக்கு எந்தவிதமாக பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் தேவையற்ற அச்சம் வேண்டாம் எனவும் அதிகாரிகள் அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.