இந்தியா

“ஆமா.. நான்தான் சொன்னேன்.. நீ வாயை மூடு” : கேள்வி கேட்ட நிருபரை பகிரங்கமாக மிரட்டிய ராம்தேவ்! #ViralVideo

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை பாபா ராம்தேவ் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“ஆமா.. நான்தான் சொன்னேன்.. நீ வாயை மூடு” : கேள்வி கேட்ட நிருபரை பகிரங்கமாக மிரட்டிய ராம்தேவ்! #ViralVideo
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பெட்ரோல், 40 ரூபாய்க்கு குறைந்துவிடும். சமையல் எரிவாயு ரூ.300-ஐ தாண்டாது” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் பாபா ராம்தேவ் ஹரியாணா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், "இந்த தேசத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40, கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.300 என்று குறைப்பவர்கள் ஆட்சிக்கு வர மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராம்தேவ், "ஆமாம் நான்தான் சொன்னேன். அதற்கென்ன? உன்னால் என்ன செய்ய முடியும்? இது மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டாம். நான் என்ன நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்று கடுமையாகப் பேசினார்.

நிருபர் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கவே, ராம்தேவ் ஆத்திரமடைந்து, "நான்தான் அன்று சொன்னேன். நீ வாயை மூடு. உன்னால் என்ன செய்ய முடியும். இது நல்லதற்கல்ல. இப்படிப் பேசாதே. நீ நல்ல பெற்றோருக்குத் தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன்" என்று காட்டமாகக் கூறினார்.

மேலும் ராம்தேவ் விலையுயர்வை ஆதரித்துப் பேசுகையில், "எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என அரசாங்கம் சொல்கிறது. வரி கிடைக்காவிட்டால் தேசத்தை எப்படி வழிநடத்துவது. சாலைகள் எங்கிருந்து வரும்?

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எப்படி கொடுக்க முடியும். விலைவாசி குறையவேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மக்களும் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா? நான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

நிருபரின் கேள்விக்கு ராம்தேவ் ஆத்திரமாக மிரட்டும் தொனியில் பதிலளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories