திருமணத்தின் போதும், திருமண உறவுகளினாலும் நடக்கும் விநோத சம்பவங்கள் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் எக்கச்சக்கமான விசித்திர சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. அவ்வகையில், இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்த நபருக்கு பீகார் மாநில குடும்பநல ஆலோசனை மையம் விதித்த உத்தரவு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, பீகாரின் கோதியாரி மாவட்டத்தில் உள்ள பவானிபூர்தானா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் மீது கொடுத்த புகாரின் மூலம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக பூர்ணியா காவல் நிலையத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தை அணுகி அப்பெண் அளித்த புகாரில், தன்னை மணமுடிப்பதற்கு முன்பே வேறொரு பெண்ணுடன் கணவருக்கு திருமணமாகியிருந்ததையும், அந்த பெண்ணுக்கும் இவருக்கும் 6 குழந்தைகள் இருப்பதையும் மறைத்து தன்னை திருமணம் செய்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஏற்கெனவே திருமணமானதை மறைத்ததோடில்லாமல், தற்போது தன்னுடன் வாழ விரும்பவில்லை என்று அவர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் சற்று குழம்பியிருக்கிறார்கள். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அந்த ஆலோசனை மையம், இரண்டு மனைவிகளுடனும் வாழ வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதில் என்ன விநோதம் என்றால், ஒருவருடன் 15 நாட்களும், மற்றொரு பெண்ணுடன் 15 நாட்களும் தனித்தனியே வாழ வேண்டும் என்றும், இருவரது குடும்பத்தினருக்கும் ஆகும் செலவை கணவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
முதலில் இந்த உத்தரவு புதுமையாக இருந்தாலும், ஆலோசனை மையத்தின் இந்த உத்தரவை இரு மனைவிகளும் ஒப்புக்கொண்டது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே இரண்டு மனைவிகள் மற்றும் அந்த கணவர் ஆகிய மூவரிடமும் எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த தகராறிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டு அதற்கு ஒப்புதல் பெற்று கையெழுத்தும் வாங்கியிருக்கிறது பீகார் குடும்பநல ஆலோசனை மையம்.