கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இளைஞரான இவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு பாபு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் குடும்பத்தில் சண்டை எழுந்துள்ளது. இதையடுத்து திடீரென பாபு மாயமாகியுள்ளார்.
இதனால் தனது அண்ணன் காணவில்லை என அவரது தம்பி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாபு மாயமானதில் அவரது தம்மி மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அண்ணன் பாபு குடித்துவிட்டு தினமும் தகராறு செய்வதால் அவரை கொலை செய்ய தம்பி சாபு திட்டமிட்டு வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை சாபு தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தம்பி, அவரது உடலை இழுத்துச் சென்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அண்ணனைக் கொலை செய்த தம்பி சாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.