நாகாலாந்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும் அவரது பேத்தியும் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF) இருவரையும் சோதனை செய்தபோது மெட்டல் டிடெக்டர் கருவிலிருந்து சத்தம் வந்துள்ளது. இதனால் இருவர் மீதும் பாதுகாப்புப்படை வீரர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
மேலும் இருவரையும் சோதனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்கு மூதாட்டியுடன் வந்த பேத்தி, கடந்த மாதம்தான் இவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் சத்தம் வருகிறது என தனது விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரின் விளக்கத்தைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூதாட்டி ஒரு மாற்றுத்திறனாளி என்று நன்கு தெரிந்தும் அவரின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளனர். இதனால் இருவரும் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
பின்னர் பாதுகாப்பு படை வீரர்களின் இத்தகைய அத்துமீறல்களைக் கண்டித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் CISF வீரர்களின் இந்த வெட்கக்கேடான செயல் குறித்து அந்த மூதாட்டியின் பேத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தது சம்மந்தப்பட்ட CISF வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா வரை சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் ஆடைகளைக் களைந்து சோதனையிட்ட CISF வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.