ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்துள்ளார்.
அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார். இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் என்பவரின் மகள் ஆவார். இந்நிலையில் திடீரென பள்ளி நிர்வாகம் மாணவி மிஸ்பாவுக்கு டி.சி வழங்கியுள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவி மிஸ்பா கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
அப்போது, "மாணவி மிஸ்பாவுக்கு வேண்டுமென்றே டி.சி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளும் கட்சி பிரமுகரின் மகன் முதல் மதிப்பெண் பெறுவதற்காகவே அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.சி வழங்கியுள்ளார்" எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் தற்கொலைக்கு முன்பு, மாணவி எழுதிய கடிதத்தில், அப்பா மன்னிக்கவும். என்னால் உங்களுக்குப் பல பிரச்சனைகள். எனது நெருங்கிய தோழியே எனது மரணத்திற்குக் காரணம். அனைத்திற்கும் நீ தான் காரணம் பூஜிதா. என்னை மன்னிக்கவும் அப்பா. உன்னை விட்டுப்போக முடியாது.
ஆனால், இன்று உன்னை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்குச் செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் பூஜிதா, பூஜிதா, பூஜிதா. இப்படிக்கு உங்கள் மகள் மிஸ்பா. விடைபெறுகிறேன் என உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் டி.சி வழங்கியதால் முதல் மதிப்பெண் எடுத்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.