இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தினந்தோறும் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும், வலதுசாரி கும்பல் மக்களின் உணவு உரிமைகளில் தலையிட்டு வருகிறது. இவர்கள் மாட்டிறைச்சியைச் சாப்பிடக்கூடாது என கூறி மாடுகளை வேனில் ஏற்றி செல்பவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறி வேன் ஓட்டுநர் மீது வலதுசாரி கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த நபரைத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இளைஞர் ஒருவர் சட்டையில்லாமல், தன்னை விட்டுவிடும் படி கையெடுத்த கும்பிடுகிறார். இருப்பினும் அந்த கும்பல் அவரை பெல்ட்டால் தாக்குவதுபோல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் வலதுசாரி கும்பலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து வேன் ஓட்டுநரை தாக்கிய 16 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.