சுங்கச்சாவடிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்தவேண்டாம் எனும் நடைமுறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த கூட்டத்தொடரின்போது சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது.
தற்போது, 60 கி.மீ தூர இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சுங்கச்சாவடிக்கு அருகே வசிக்கும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை காண்பித்தால் போதும் கட்டணம் செலுத்தவேண்டாம் எனும் நடைமுறை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் ஆதார் அட்டை வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு பாஸ் வழங்க உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.