'The Kashmir Files' திரைப்படம் முழுக்கப் பொய்களே முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்.
இந்தப் படம், 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டது எனக் கூறப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.கவினர் இந்தப் படத்தை வியந்தோதி வருகின்றனர்.
ஆனால், இந்தப்படம் ஒருதலைப்பட்சமானது என்றும், இது நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் மத மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்த முயல்கிறது என்றும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் படத்தில் பல பொய்கள் திட்டமிட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
1990ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது மிகப்பெரிய பொய். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியபோது காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி இருந்தது. மத்தியில், வி.பி.சிங் தலைமையிலான பா.ஜ.கவின் ஆதரவுடைய அரசுதான் இருந்தது.
அச்சமயத்தில் காஷ்மீர் பண்டிட்கள் மட்டும் புலம்பெயரவும் இல்லை. கொல்லப்படவும் இல்லை. முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர், அவர்களும் காஷ்மீரில் இருந்து புலம்பெயர வேண்டியிருந்தது, இன்னும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவில்லை.
காஷ்மீர் பண்டிட்களை பாதுகாப்பாக அழைத்து வருவதில் தேசிய மாநாட்டுக் கட்சி தனது பங்கை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தப் படம் வெறுப்பை விதைக்கும் நோக்கில் படம் எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.