உக்ரைன் - ரஷ்யாவுடனான போர் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுடன் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை வித்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் கச்சா எண்ணெயை பொருமளவில் இருக்குமதி செய்யும் நாடுகள் என்ன மாதிரியான முடிவெடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் நீண்ட காலமாக நட்பு கொண்டிருக்கும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதேவேளையில் ரஷ்யாவின் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருவதாகவும் இந்திய பெட்ரோலித் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் ஜாவோவிடம், இந்தியாவின் செயல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜென் ஜாவோ, எந்தவொரு நாட்டுக்கும் எங்கள் செய்தி அதுதான்.. நாங்கள் விதித்த பரிந்துரைத்த பொருளாதார தடைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
எனினும் இந்தியாவின் நடவடிக்கை எங்கள் உத்தரவை மீறும் என்று நான் நம்பவில்லை. ஆனால் வரலாறு எழுதப்படும் போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள் என்று பேசினார். ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.