நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கேள்வி நேரமும் நடைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் எச்.எஸ்.புரி பதிலளித்து பேசியுள்ளார்.
அதில், ரஷ்யா உக்ரைன் இடையேயான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இலங்கை போன்ற நாடுகளில் 50 சதவிகிதத்துக்கு மேல் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும் இந்தியாவில் ஐந்து சதவிகித அளவுக்கே உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் கருத்தில் கொண்டு ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் மீதான விலையை பெரிதளவில் உயர்த்தாமல் இருந்து வந்ததை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர் என அரசியல் நோக்கர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதேச்சமயத்தில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் பொது மக்கள் மத்தியில் பீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.