மத்திய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை வாலிபர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வாகனம் அருகே இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற இளைஞர்கள் கூட்டம் ஒன்று அந்த இரண்டு பெண்களைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பட்டப்பகலில் பலபேர் இருக்கும்போது இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மார்ச் 11ம் தேதி அலிராஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட வால்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அன்றைய தினம் பழங்குடிகளின் பகோரிய திருவிழா நடந்துள்ளது. அந்த இளைஞர்கள் கூட்டமும், பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அலிராஜ்பூர் போலிஸார் கூறுகையில், 'இதில் தொடர்புடைய இளைஞர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்' என தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.