இந்தியா

வாடகைக்கு வீடு எடுத்து ரூ.5 லட்சத்துக்கு லீஸ்க்கு விட்ட பாஜக நிர்வாகிகள்: வசமாக சிக்கிய இருவருக்கு காப்பு

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் வீட்டை வாடகை எடுத்து போகியத்துக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து ரூ.5 லட்சத்துக்கு லீஸ்க்கு விட்ட பாஜக நிர்வாகிகள்: வசமாக சிக்கிய இருவருக்கு காப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (62). ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், தனது வீட்டின் கீழ்தளத்தை வாடகைக்கு விட முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்.

இதனை கண்ட லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையைச் சேர்ந்த பிறைசூடன், மோகன் (எ) மோகன்ராஜ் ஆகிய இருவரும், தங்கமணியை அணுகி, தாங்கள் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும், புவனா என்பவர் பங்குதாரராக இருப்பதாகவும் கூறி, வீடு வாடகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து தங்கமணி அவர்களிடம் 2 வருடத்துக்கு ஒப்பந்தம்போட்டு முன்பணமாக ரூ. 75 ஆயிரம் பெற்றுக்கொண்டு, மாத வாடகை ரூ.10 ஆயிரம் பேசி வீட்டை வாடகை விட்டுள்ளார். வீட்டை வாடகை எடுத்த பிறைசூடன், மோகன் ஆகியோர் அந்த வீட்டில் சுரேஷ் என்பவரை தங்க வைத்துள்ளனர்.

வாடகைக்கு வீடு எடுத்து ரூ.5 லட்சத்துக்கு லீஸ்க்கு விட்ட பாஜக நிர்வாகிகள்: வசமாக சிக்கிய இருவருக்கு காப்பு

இரண்டாண்டு முடியும் சமயத்தில் அங்கு வசித்து வந்த சுரேஷ் வீட்டை காலி செய்து சென்றுள்ளார். அச்சமயம் தங்கமணி வீடு தனதுக்கு தேவைப்படுவதாகவும் கூறி பிறைசூடன், மோகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மேலும் ஒரு வருடத்துக்கு வீட்டை வாடகைக்கு தரும்படியும், வாடகை ஆயிரம் உயர்த்தி ரூ.11 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு தங்கமணியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் வீட்டை வாடகை எடுத்த அவர்கள், தங்கமணிக்கு தெரியாமல், தீர்த்தராமன் என்பவருக்கு குத்தகைக்கு பேசி ரூ. 5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு தங்கமணிக்கு மாத வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததோடு, முன்பணத்தில் கழித்துக்கொள்ளும்படி கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தங்கமணி விசாரித்துள்ளார். அப்போது தன்னிடம் வீட்டை வாடகை எடுத்து, தீர்த்தராமனுக்கு குத்தகைக்குவிட்டது தெரியவந்தது. இதனால் வீட்டை காலி செய்யும்படியும், வாடகை பணத்தை கொடுக்கும்படியும் தங்கமணி கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் வாடகையும் கொடுக்கவில்லை. வீட்டையும் காலி செய்யவில்லை என தெரிகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமணி இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிறைசூடன், மோகன், தீர்த்தராமன், புவனா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலிஸார் பிறைசூடன், மோகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பிறைசூடன் உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவராகவும், மோகன் உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞர் அணி துணை தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories