உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தர காண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஒரேசேர கூடியிருக்கிறது. இருப்பினும் ஆளும் அரசாக உள்ள பாஜக வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட வாய்ப்பிருக்கும் என எண்ணி எதிர்க்கட்சியினர் இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போன்று கண்காணித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் யோகேஷ் சர்மா வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பாஜகவினர் எவரேனும் நுழைந்து சதி செய்கிறார்களா, அனைத்தும் பத்திரமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒரு புறம் வைரலாக்கப்பட்டு வந்தாலும், பாஜகவினரின் செயல்களாலேயே இவ்வாறு கண்காணிக்கப்படும் சூழல் நிலவுவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி பெருவாரியான வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.