கேட்ட வரதட்சணையை முழுதாக கொடுக்காவிட்டால் தாலி கட்ட மாட்டேன் என திருமணத்தன்று மணமகன் அராஜகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள சப்பல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்தான் வரதட்சணை கேட்டு தகராறு செய்திருக்கிறார்.
மணப்பெண் வீட்டார் கொடுப்பதாக உறுதியளித்த வரதட்சணையில் மீதியை கொடுத்தால்தான் தாலி கட்ட அனுமதிக்கப்படும் என அரசு ஊழியராக இருக்கும் அந்த மணமகனும், அவரது குடும்பத்தாரும் திருமணம் நடக்க இருக்கும் போதே வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் ‘கேட்ட பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இப்போதே அதனை கொடுக்காவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிட்டு சென்றிடுவேன்’ என மணமகன் கூறியிருக்கிறார்.
இதற்கு, ‘இன்னும் 1 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதனை நான் விரைவில் கொடுத்துவிடுகிறேன்’ என மணமகள் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு ‘பணம் மட்டுமல்ல நான் கேட்ட மற்ற நகைகளையும் இப்போதே கொடுத்தால் கல்யாணம் நடக்கும்’ என மிரட்டியிருக்கிறார். இதுபோக, ‘எல்லாரும்தான் வரதட்சணை வாங்குறாங்க. நான் மட்டுமா வாங்குறேன்’ என்றும் அந்த மணமகன் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்ற தேதி சரியாக வெளியாகவில்லை என்றாலும், தற்போது அது தொடர்பான வீடியோ வைரலாகி வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் செய்வேன் என்ற அந்த மணமகனின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.