உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 33-35 இடங்களைப் பிடிக்கும் என நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 632 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நியூஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 33-35 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க 31-33 இடங்களும், ஆம் ஆத்மி 0-3 இடங்களும், இதர கட்சிகள் 0-2 இடங்களைப் பிடிக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின்படி காங்கிரஸ் 33-38 இடங்களிலும், பா.ஜ.க 29-34 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசைன்பாக்ஸ்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 35-40 இடங்களிலும், பா.ஜ.க 26-30 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 32-38 இடங்களிலும், பா.ஜ.க 26-32 இடங்களிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 37 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.