மத்திய பிரதேச மாநிலம், ஓரியண்டல் கல்லூரி அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு சிறுவர்கள் அந்த வழியாக வந்துள்ளனர்.
அதைப்பார்த்த போலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால் சிறுவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். பிறகு போலிஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர்.
பின்னர் சிறுவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் துப்பாக்கி, கத்தி ஆகிய பயங்கர ஆயுதங்கள் இருந்ததை பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைதான சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்த்து துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களைத் தயாரித்ததாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது 2 நாட்டு துப்பாக்கிகள், இரட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று, எட்டு வாள்கத்திகள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலிஸார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பிறகு சமூகவலைதளங்களைப் பார்த்து ஆயுதங்கள் தயாரித்த மூன்று சிறுவர்களை போலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தந்தை எலக்ட்ரீஷியனாக உள்ளார். இவர்கள் வீட்டிலிருந்த மின்சார உபகரணங்களை கொண்டே சிறுவர்கள் இந்த ஆயுதங்களைத் தயாரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.