‘கச்சோரி’ வாங்க ரயில் ஓட்டுநர் ஒருவர் ரயிலையே நிறுத்திய சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் ரயில் நிலையம் அருகே, தவூத்பூர் என்ற பகுதியில் ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங் வழித்தடத்தில் தினமும் காலை 8 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடந்து செல்வது வழக்கம்.
அந்தவகையில், இன்று காலை ரயில் ஒன்று வழக்கம்போல மெதுவாக கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ‘கச்சோரி’யை ரயில் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
நம்மூர் போண்டா போல உள்ளே மசாலாவுடன் செய்யப்படும் இந்த திண்பண்டம் அப்பகுதில் பிரசித்தி பெற்றது. அப்பகுதிக்கு செல்பவர்கள் பலரும் இந்த கச்சோரியை ருசிக்க விரும்புவார்கள்.
அந்த கச்சோரியை வாங்குவதற்காக ரயில் ஓட்டுனர் சில விநாடிகள் ரயிலை நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து அல்வார் ரயில்நிலைய கண்காணி்ப்பாளர் விசாரணை நடத்தி ஜெய்ப்பூர் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து ரயில் ஓட்டுனர், கேட்மேன், உள்ளிட்ட 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது ராஜஸ்தான் ரயில்வே நிர்வாகம்.