உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது. 3ம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20ம் தெதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ உத்தர பிரதேச வாக்காளர்களை மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
அதில், ஐதராபாத்தில் உள்ள கோஷாமஹர் சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங். இவர் கடந்த திங்களன்று வெளியிட்ட வீடியோவில், உத்தரப் பிரதேசத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலின் போது யோகி ஆதித்யநாத்தின் எதிரிகள் கூட அதிக அளவில் வந்து வாக்களித்ததாகவும், பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.
மேலும், இந்துக்கள் அனைவரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஓட்டு போடாதவர்கள், யோகி ஆதித்யநாத் ஏராளமான ஜே.சி.பி., புல்டோசர்களை வைத்துள்ளார். அதன் மூலம் அவர்களது வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டு உத்தர பிரதேசத்தில் இருந்தே வெளியேற்றப்படுவார்கள். யோகியை ஆதரிக்காதவர்களை தேர்தல் முடிந்ததும், அடையாளம் காணப்படுவார்கள்" என்று அவர் ராஜா சிங் கூறியுள்ளார்.
அவரது வீடியோ வைரலானதை அடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு ராஜா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.