மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி பங்கேற்றுப் பேசிய கர்நாடகா பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யா, ” மோடி ஆட்சிக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் இருந்தது. இப்போது ஒற்றை இலக்கத்தில் பணவீக்கம் இருக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்பு ரூ.110 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.230 லட்சம் கோடியாக உள்ளது. மோடிக்கு முன் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது.
ஜிடிபி பல மடங்கு அதிகரித்து இருந்தால், அன்னிய நேரடி முதலீடு பல மடங்கு அதிகரித்து இருந்தால், யூனிகார்ன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருந்தால், எப்படி வேலையில்லா தலைமுறை இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களின் அரசியல் வேலைவாய்ப்பின்மையை நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எனக் குழப்பிக் கொள்கிறார்கள். கடின உழைப்பால் மற்றும் திறமையானவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. வேலையில்லாத ஒரே நபர் காங்கிரஸ் கட்சியின் இளவரசர்தான்” எனப் பேசியிருந்தார்.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என தேஜஸ்வி சூர்யா பேசிய அதே நாள் மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய் அளித்த பதிலில், ” 2018 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையின்மை மற்றும் நிதிநெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலறிக்கையில், NCRB தரவுகளின்படி, “2018 -ஆம் ஆண்டு வேலையின்மை காரணமாக 2,741 தற்கொலைகளும், வியாபார நஷ்டம் அல்லது கடன் சுமை காரணமாக 4,970 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. அதே போல 2019-ஆம் ஆண்டு வேலையின்மையால் 2,851 தற்கொலைகளும், வியாபார நஷ்டம், கடன் சுமையால் 5,908 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில் வேலையின்மை காரணமாக 3,548 தற்கொலைகளும், வியாபார நஷ்டம் அல்லது கடன் சுமை காரணமாக 5,213 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமும், அதனால் ஏற்படும் தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருப்பது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்திருக்கும் நிலையில், வேலையில்லா திண்டாட்டமே இல்லை என பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.