கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.
இப்படி இருக்கையில், அண்மையில் கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால் சுரேஷ் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாகப் பாம்பு அவரது கைப்பிடியிலிருந்து நழுவி சுரேஷின் வலது தொடையில் கடித்தது. இதையடுத்து அவர் பாம்பை கீழே விட்டுவிட்டு வலியால் துடித்துள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து வைரலானது.
இதனையடுத்து சுரேஷுக்கு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு சார்பில் இலவசமாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பாம்பு கடித்ததால் சுயநினைவின்றி செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சுரேஷுக்கு தற்போது நினைவு திரும்பியிருப்பதாகவும் செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் சிறப்பு மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
மேலும் ஓரிரு நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சுரேஷ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று முன்பு ஒரு முறையும் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வாவா சுரேஷ் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.