உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யாநாத் லக்னோ பல்கலைக்கழகம் சென்றார். அப்போது அவர் கார் வந்த சாலையை பூஜா சுக்லா என்ற இளம்பெண் உட்பட பலர் மறித்து யோகிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.
இதனால் அவர்கள் அனைவரையும் போலிஸார் கைது செய்து 20 நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில் முதல்வர் யோகிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இளம்பெண் பூஜா சுக்லாவுக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அடுத்தடுத்து யோகி ஆட்சியை கவிழ்ப்பதற்கான காய்களை அகிலேஷ் யாதவ் நகர்த்தி வருவதால் பா.ஜ.க தலைமையிடம் பீதியடைந்துள்ளது.
இதுகுறித்துக் கூறிய பூஜா சுக்லா,"இளைஞர்கள் அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதை மாற்ற வேண்டும். மாணவரால் சிறந்த தலைவராக முடியும். மக்களுக்கு எதிராக யோகி அரசு ஒவ்வொரு சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. நான் போட்டியிடும் தொகுதியில் கட்சி மற்றும் மக்களின் ஆதரவுடன் பா.ஜ.கவை தோற்கடித்து வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.