பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி கடந்த இரண்டு நாட்களாக தேர்வு எழுதிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் விதமான மாணவர்கள் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் போலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.
நவாடா, ஆராவி, சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி, கயா போன்ற மாநிலத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் பீகார் மாநிலம் முழுவதும் ரயில் சேவை முடங்கியுள்ளது.
மாணவர்களின் போராட்டம் பீகார் மாநிலத்தில் நிலவி வரும் வேலையின்மையைக் காட்டுகிறது என பலரும் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள அடக்குமுறையைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஒவ்வொரு இளைஞரும் தனது உரிமைக்காக போராட உரிமை வேண்டும். பீகாரில் போராடும் மாணவர்களுக்கு நீதி வேண்டும். இதுவே குடியரசு எனத் தெரிவித்துள்ளார்.