கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா காவல் நிலையத்தில் சிவக்குமார், சந்தோஷ் ஆகியோர் காவலர்களாக பணியாற்றினார். இந்த நிலையில், பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீட்டின் முன்பு சிவக்குமாரும், சந்தோசும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள சர்க்கிள் பகுதியில் ஒய்சாலா போலிஸார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிவக்குமாரும், சந்தோசும் 2 பேருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் சிவக்குமார், சந்தோஷ் மற்ற 2 பேரை பிடித்து போலிஸார் விசாரித்தனர்.
அப்போது சிவக்குமாரும், சந்தோசும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அந்த 2 பேரிடம் கஞ்சா விற்பனை செய்ய கொடுத்ததும், கஞ்சா விற்ற பணத்தை தராததால் அவர்கள் 2 பேரிடமும் சிவக்குமாரும், சந்தோசும் தகராறு செய்ததும் தெரியவந்தது.
இதனால் அவர்கள் 4 பேரையும் ஒய்சாலா போலிஸார் பிடித்து ஆர்.டி.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிவக்குமார், சந்தோசிடம் ஆர்.டி.நகர் போலிஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது பிரபல கஞ்சா விற்பனையாளர்களான அகில்ராஜ், அம்ஜத்கானிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து 2 பேரும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கோரமங்களா போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆர்.டி.நகர் போலிஸ் இன்ஸ்பெக்டர் உங்கள் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிவக்குமார், சந்தோசை கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பிடித்து வைத்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
அப்போது கோரமங்களா போலிஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் 2 பேரிடமும் நிறைய முறை கஞ்சா விற்பனையில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தேன். அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சிவக்குமார், சந்தோஷ் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டனர். எளிதில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் சிவக்குமாரும், சந்தோசும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைதான காவலர்கள் உள்பட 4 பேர் மீது ஆர்.டி.நகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக காவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.