உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்படி இருக்கையில் உத்தர பிரதேசத்தின் தேர்தள் களம் பரபரப்பாக உள்ளது.
ஏனெனில், ஆளும் பாஜகவில் இருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி போட்டிக் கட்சியான சமாஜ்வாதி உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்து வருகின்றன.
இது ஆட்சியில் உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச தேர்தல் களத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யமாக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் அழும் வீடியோ ANIல் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், அர்ஷத் ரானா என்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு முதலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியில் ஆழ்ந்த அர்ஷத் ரானா அந்த இடத்திலேயே தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். மேலும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.