மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமம்தான் தளுபுரா. அங்கு, கில்சிபுர் காவல் நிலையத்துக்குட்பட்ட இந்த தளுபுரா பகுதி மக்களுடன் பாசமாக சுற்றித்திரிந்த குரங்கு ஒன்றுக்கு கடந்த டிசம்பர் 29ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.
இதனையடுத்து அந்த குரங்குக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அந்த குரங்கு உயிரிழந்திருக்கிறது. இதனையடுத்து தங்களுடன் பாசமாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த குரங்கின் இறுதிச் சடங்கை நடத்துவதற்காக ஊர்மக்கள் ஒன்றுகூடி பணம் வசூல் செய்து அதற்கு அளிக்க வேண்டிய அனைத்து இறுதி மரியாதையையும் செய்திருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஜனவரி 10ம் தேதி குரங்கு மறைந்ததன் நினைவாக தளுபுரா மக்கள் அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது. இதற்காக கிராம மக்கள் 1500 பேர் திரண்டனர். இந்த விருந்துக்காக மிகப்பெரிய பந்தல் போடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. இதனையடுத்து கில்சிபுர் காவல்நிலைய போலிஸார் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவர் மீதும் பிற கிராமத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.