கர்நடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹெடிகொண்டா கிராமத்தில் உள்ள கனரா வங்கி. இந்த வங்கியில் ரத்திஹள்ளி பகுதியைச் சேர்ந்த வாசிம் ஹஸ்ரத்சாப் முல்லா (33) என்பவர் காகினெலி காவல் எல்லைக்குட்பட்ட கனரா வங்கியின் ஹெடிகொண்டா கிளையில் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.
முல்லாவுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதால் வங்கி மேலாளர் அவரது விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார். இதனால் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் முல்லா.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முல்லா கடந்த சனிக்கிழமை இரவு சம்மந்தப்பட்ட வங்கிக்கே நேரில் சென்று கதவை உடைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனால் வங்கியில் இருந்த பொருட்கள், பத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் புகை வருவதை கண்டு அதிர்ச்சியுற்று உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினருடன் விரைந்திருக்கிறார்கள்.
இதனிடையே பொதுமக்களை கண்டதும் தப்பிக்க முயன்ற முல்லாவை போலிஸ் வரும் வரை மக்களே சிறை பிடித்திருந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லாவின் செயலால் வங்கியில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் முல்லாவை காகினெலி போலிஸார் கைது அவர் மீது 436, 477, 435 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.