கேரள மாநிலம், வலியத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த அஸ்வதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் செவிலியர் உடையில் வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும் என கூறி அஸ்வதியின் குழந்தையை தூக்கிக் சென்றுள்ளார். அவர் சென்று பல மணி நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலிஸார் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை நீது ராஜ் என்ற பெண் கடத்தியது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்து நீது ராஜிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நீது ராஜ், இப்ராகிம் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இப்ராகிம் நீது ராஜிடமிருந்து ரூ.30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நீது ராஜின் காதலை முறித்துக் கொண்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய இப்ராகிம் முடிவு செய்துள்ளார். இதை அறிந்த நீது ராஜ், காதலனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தையைக் கடத்தி அது தங்களுக்குப் பிறந்த குழந்தை காதலனை மிரட்டத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.