கேரளாவில் உள்ள வட்டப்பாராவில் சுமார் 4 ஆண்டுகளாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அஸ்பெர்க் என்பவர் விடுதியில் தங்கியபடி வசித்து வருகிறார்.
68 வயதான ஸ்டீவன் அஸ்பெர்க் புத்தாண்டுக்கு முந்தைய நாள் வெள்ளார் பகுதியில் இருந்த மதுக்கடையில் இருந்து 3 மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு விடுதியை நோக்கி தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றார்.
அப்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பார்த்த வந்த அஸ்பெர்க்கை சோதித்த போலிஸர் மதுபாட்டில்களுக்கான ரசீது எங்கே என கேட்டுள்ளார்.
அதற்கு அஸ்பெர்க் பில் வாங்க மறந்துவிட்டேன். நீங்கள் அனுமதித்தான் திரும்பச் சென்று ரசீதை வாங்கி வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கு மறுத்த போலிஸார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை தூக்கி எறியும்படி பணித்திருக்கிறார்கள்.
அதற்கு ஸ்டீவன் அஸ்பெர்க் முடியாது எனக் கூறியிருக்கிறார். போலிஸாரும் விடாப்பிடியாக இருந்ததால் அஸ்பெர்க் தன்னிடம் இருந்த மதுபாட்டில்களை தூக்கி எறியாமல் சாலையோரத்தில் மதுவை கீழே ஊற்றியிருக்கிறார்.
கடைசி பாட்டிலில் இருந்த மதுவை கொட்டி முடிக்கும் முன்பு தடுத்த போலிஸார் ரசீதை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக பதியப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இந்தியா டுடே செய்திக்கு பேசியுள்ள ஸ்டீவன் அஸ்பெர்க் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுபோன்ற சில சம்பவங்களை சந்தித்திருப்பதாகவும் ஆனால் சில போலிஸார் தன்மையாகவும் தோழமையுடனும் இருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் முதலமைச்சர் பினராயி விஜயன் வரை செல்ல, உடனடியாக மாநிலத்தின் சுற்றுலா விதிகளுக்கு எதிரான சுற்றுலா பயணிகளிடம் செயல்பட்ட போலிஸார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இதனையடுத்து அஸ்பெர்க்கிடம் மேற்குறிப்பிட்டபடி நடந்துகொண்ட போலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் இது போன்ற செயல்களால் கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணத்தை குலைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே அமைச்சர் வி சிவன்குட்டி ஸ்வீடன் சுற்றுலா பயணி அஸ்பெர்க்கை சந்தித்து அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், இதுபோன்று மீண்டும் எந்த சம்பவமும் நடக்காது எனவும் உறுதியளித்திருக்கிறார்.