மத்திய பிரதேச மாநிலம் பா.ஜ.க சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், ரூ. 15 லட்சத்துக்கு மேல் ஊழல் நடைபெற்றால் மட்டுமே புகார் கூற வேண்டும் என ஜனார்தன் மிஸ்ரா பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், "கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊழல் செய்துள்ளதாக எனக்குப் புகார்கள் வருகின்றன. ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டும் புகார் அளியுங்கள். இல்லை என்றால் என்னிடம் புகார் கூற வராதீர்கள்.
பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது. அடுத்த முறை போட்டியிட்டாலும் ரூ.7 லட்சம் வரை செலவாகும். இதனால் கூடுதலாக ஒரு லட்சம் பஞ்சாயத்துத் தலைவர் ஊழல் செய்தால் தப்பில்லை.
எனவே, ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்தால் மட்டுமே என்னிடம் புகார் கூற வாருங்கள். இதுதான் இன்றைய நிலையும் கூட” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும், பா.ஜ.க வெளிப்படையாக ஊழலை ஆதரிக்கிறதா எனக் கேள்வி எழுப்பி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.