முரசொலி தலையங்கம்

“நிதி தர வேண்டிய தார்மீகக் கடமை ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது..” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

தமிழ்நாட்டில் பெய்து தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்டோம். இதுவரை வரவில்லை. எப்போது நிதி வழங்குவார்கள் என்பதும் தெரியவில்லை!

modi amith shah
modi amith shah
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் பெய்து தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்டோம். இதுவரை வரவில்லை. எப்போது நிதி வழங்குவார்கள் என்பதும் தெரியவில்லை!

வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகம் வந்து பார்வையிட்டுச் சென்ற ஒன்றியக்குழு என்ன மாதிரியான அறிக்கை கொடுத்துள்ளது, எவ்வளவு தருவதற்காக உத்தேசம் வைத்துள்ளார்கள் என்பதும் தெரியவில்லை! இதற்கான விளக்கம் கேட்பதாகத்தான் முதலமைச்சரின் கடிதம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை 534.6 மி.மீ மழை பெய்தது. வழக்கமாக சராசரியாக 338.4 மி.மீ மழை பதிவாகும் நிலையில் இந்தாண்டு 543.6 மி.மீ மழை பதிவானது. இது இயல்பை விட 61 சதவிகிதம் அதிகம். சென்னையில் வழக்கமாக 582.4 மி.மீ மழை பதிவாகும் நிலையில் இந்தாண்டு 928.8 மி.மீ மழை பதிவானது. இது இயல்பை விட 59 சதவிகிதம் அதிகமாகும். அதிகபட்சமாக திருப்பத்தூரில் 517.6 மி.மீ பதிவானது. அங்கு வழக்கமாக 216.1 மி.மீ. மழை பதிவாகும். இது இயல்பை விட 140 சதவிகிதம் அதிகம்.

வடகிழக்கு பருவ மழையில் சென்னையில் ஒருநாள் அதிகபட்சமாக நவம்பர் 7-ம் தேதி 126.5 மி.மீ மழை பதிவானது. வடகிழக்கு பருவ மழையில் நாகப்பட்டினத்தில் நவம்பர் 10-ம் தேதி ஒரே நாளில் 276.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் நவம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 90.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதை வைத்துத்தான் வரலாறு காணாத மழை என்கிறோம்.

தமிழ்நாட்டில் கனமழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டோம். 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங் களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்ட மதிப்பீடாக 549 கோடியே 63 லட்சம் ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடியே 86 லட்சம் ரூபாயும் என ஆக மொத்தம் 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்சம் ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி, ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கணக்கெடுக்கப்பட்டுள்ள, கூடுதலான சேத விவரங்களின்படி தற்காலிக சீரமைப்பு பணி களுக்கு 521 கோடி ருபாயும், நிரந்தரமாக சீரமைக்க ஆயிரத்து 475 கோடி ரூபாயும் என ஆயிரத்து 996 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப் பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ஆயிரத்து 70 கோடியே 92 லட்சம் ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3 ஆயிரத்து 554 கோடியே 88 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4ஆயிரத்து 625 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது.

இதன் பிறகுதான் ஒன்றியக் குழு 21.11.2021 வருகை தந்தது. மாநிலம் முழுவதும் சுற்றிப் பார்த்தது. அவர்களிடம் தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப்பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக்கோரி முதல்வர் கோரிக்கை வைத்தார்கள்.

16-11-2021, 25-11-2021 மற்றும் 15-12-2021 ஆகிய நாட்களில் சேதவிவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் ஒன்றிய அரசுக்கு தரப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ளபாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமை யாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிதி உரிமை என்பதும், நிதி வளம் என்பதும் ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது. அதனைச் செய்து தர வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரால் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை மொத்தமாக ஒன்றிய அரசின் கருவூலத்துக்கு பா.ஜ.க. அரசு திருப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கே.சந்தானம் சொன்னார், “இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட்டால் அந்த அரசின் வாசலில் நின்று பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களாக மாநிலங்கள் ஆகிவிடும்” என்று சொன்னார். அதுதான் இப்போது நடக்கிறது!

banner

Related Stories

Related Stories